அதிமுகவில் உச்சகட்ட மோதல்! விழுப்புரம் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள்
போலீசாருடன் தள்ளுமுள்ளு!

விழுப்புரம்: தமிழக எதிர்க்கட்சியான அதிமுகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், விழுப்புரத்தில் உள்ள மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்திற்குள் நுழைய முயன்றபோது, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பிற்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதிமுகவில் வெடித்த புதிய பிளவு: கடந்த சில நாட்களாகவே அதிமுக தலைமைக்கும் சில முக்கிய மூத்த நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் புகைந்து வந்தன. இதன் உச்சகட்டமாக, தற்போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு தரப்பும், முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தலைமையில் மற்றொரு தரப்பும் தனித்தனி அணிகளாகச் செயல்படத் துவங்கியுள்ளனர்.
பதவி பறிப்பும்.. புதிய நியமனமும்.. உட்கட்சி மோதல் தீவிரமடைந்ததை அடுத்து, எடப்பாடி பழனிச்சாமி அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோரின் முக்கியக் கட்சிப் பொறுப்புகளைப் பறித்த இபிஎஸ், அவர்களுக்குப் பதிலாகப் புதிய நிர்வாகிகளை நியமித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, விழுப்புரத்தின் புதிய மாவட்ட கழகச் செயலாளராக, சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகியிருந்த விழுப்புரம் நகர கழகச் செயலாளர் பசுபதி அதிரடியாக நியமிக்கப்பட்டார்.
பரபரப்பான முற்றுகை: தலைமையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் இன்று விழுப்புரம் மாவட்ட தலைமை அலுவலகத்திற்குத் திரண்டு வந்தனர். அவர்கள் உள்ளே செல்ல முயன்றபோது, சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களை அநுமதிக்க மறுத்து பேரிகார்டுகளை அமைத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த தொண்டர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, உள்ளே நுழைய முற்பட்டதால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. இந்த சம்பவத்தால் விழுப்புரம் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.