அரசியல்

தோல்விதான் சிறந்த பாடங்களை கற்று தருகிறது” – பிடிஆர்

மதுரையில் நடைபெற்ற மாநகர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு கட்சியினருக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். அண்ணா நகர் பகுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு அவைத்தலைவர் ஒச்சுபாலு தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலாளர் கோ. தளபதி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பேசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தற்போதைய அரசியல் சூழ்நிலையை கட்சி தீவிரமாக சுயபரிசோதனை செய்ய வேண்டிய தருணமாக பார்க்க வேண்டும் என்று கூறினார். கடந்த தேர்தலில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை சரியாக கணிக்காததே பின்னடைவை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மறைவுக்கு பிறகு உருவான அரசியல் அலை போல, 2011 தேர்தலிலும் ஒரு பெரிய மாற்ற அலை ஏற்பட்டது. அதுபோல தற்போது வெளிப்படையாக தெரியாத ஒரு அரசியல் அலை உருவாகியுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் கட்சி நிலையான வாக்கு விகிதத்தை பெற்றிருந்ததாக கூறிய அவர், சமீபத்திய தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்திருப்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்றார். இதனால், இனி ஒருவரை ஒருவர் குறை கூறாமல் கட்சியின் செயல்பாடுகளை சுயபரிசோதனை செய்து மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

“வெற்றியை விட தோல்விதான் அதிகமான அனுபவங்களையும் பாடங்களையும் கற்றுத்தருகிறது. இயக்கத்தின் கொள்கைகள் நிலையானவை. ஆனால், காலத்திற்கேற்ப செயல்முறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அது கட்சி நிர்வாகத்திற்கும் ஆட்சிக்கும் பொருந்தும்” என்றும் அவர் கூறினார்.

அனைவரும் இணைந்து செயல்பட்டு அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும் என்றும், கட்சியினரின் கருத்துகள் மற்றும் குறைகளை கள ஆய்வுக் குழுவிடம் தெரிவிக்கலாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button