என் சீட்டுல நீங்க உட்காருங்க”.. டிரைவருக்காக கார் ஓட்டிய முதலமைச்சர் விஜய்.. வைரலாகும் சம்பவம்!

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் ஜோசப் விஜய் செய்த செயல் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. புதிய மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகளுக்கான வாகனங்களை தொடங்கி வைத்த அவர், ஒரு வாகனத்தை நேரடியாக ஓட்டி பார்த்த சம்பவம் பலரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புதிதாக வாங்கப்பட்ட வாகனங்கள் சேவைக்காக இன்று தலைமைச் செயலகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் விஜய், பல்வேறு வாகனங்களின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன், ஓட்டுநர்களுக்கும் சாவிகளை வழங்கினார்.
அப்போது கடைசியாக சாவி பெற்ற ஓட்டுநர், “ஒரு ரவுண்ட் நீங்கள் ஓட்டி பார்க்க வேண்டும்” என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு உடனே சம்மதித்த விஜய், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து வாகனத்தை இயக்கினார். அந்த வாகனத்திற்காக நியமிக்கப்பட்டிருந்த டிரைவரை அருகிலுள்ள இருக்கையில் அமர வைத்துக் கொண்டு தலைமைச் செயலக வளாகத்தில் சிறிய சுற்று வந்தார்.
புதிய வாகனத்தின் வசதிகள் மற்றும் இயக்கத் தரத்தையும் அவர் நேரில் ஆய்வு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தை அங்கு இருந்த அரசு ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்ததாக கூறப்படுகிறது.
பொதுவாக அரசு விழாக்களில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கும் தலைவர்கள் வாகனத்தில் பயணம் செய்வது வழக்கம். ஆனால் நேரடியாக வாகனம் ஓட்டி பார்வையிட்ட சம்பவம் அரிதான ஒன்று என்பதால், முதலமைச்சர் விஜயின் இந்த செயல் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
மேலும் பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து மக்களுடன் நெருக்கமாக நடந்து கொள்ளும் விதமான செயல்கள் மூலம் விஜய் கவனம் பெற்று வருகிறார் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.



