தமிழ்நாடு

சென்னை புறநகர் பகுதிகளில் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு..!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காய்ச்சலால் மருத்துவமனைகளை நாடுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 10 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சைக்காக சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

140 பேருக்கு டெங்கு உறுதி

காய்ச்சல் பாதிப்புடன் பரிசோதனை மேற்கொண்டவர்களில் சுமார் 140 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பிடும்போது டெங்கு பாதிப்பு சற்று அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னையின் அடையாறு, அண்ணா நகர் மற்றும் வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் சுமார் 4,500 பேர் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 160 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பரவி வரும் வைரஸ் காய்ச்சல்கள்

டெங்கு மட்டுமின்றி இன்ஃப்ளூயன்சா ஏ, ரைனோ வைரஸ் மற்றும் ஆர்எஸ்வி உள்ளிட்ட வைரஸ் தொற்றுகளும் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால், மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று வேகமாக பரவும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீடுகளில் தண்ணீர் தேங்க விடாதீர்கள்

டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்த வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வீடுகள், கட்டிடங்கள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகள், கழிவுகள் மற்றும் தேவையற்ற பொருட்களை அகற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மழைக்கால சூழல் மற்றும் வைரஸ் தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தனிப்பட்ட சுகாதாரத்திலும் சுற்றுப்புற தூய்மையிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button