நாளை வைகாசி முதல் நாள்- வாழ்வில் செல்வ வளம் சேர்க்கும் விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு…
நமது நியாயமான கோரிக்கை எதுவானாலும் அடுத்த 3 விஷ்ணுபதி காலம் முடிவடைவதற்குள் நிறைவேறும். இது ஏகாதசி விரதத்தை விட பல மடங்க...

தமிழ் மாதங்களில் இரண்டாவதாக வரும் வைகாசி மாதம் வாழ்வில் மாற்றங்களையும், ஏற்றங்களையும் தரும் மாதம் என கருதப்படுகிறது. இந்த ஆண்டு மே 15ம் தேதி துவங்கி, ஜூன் 14ம் தேதி வரை வைகாசி மாதம் உள்ளது. இந்த மாதத்திற்கு ஆன்மீக ரீதியாக அப்படி என்ன சிறப்புகள் உள்ளது? இந்த மாதத்தில் என்ன செய்தால் என்ன பலன் கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி ஆன்மிக மகத்துவம் உள்ளது. ஆனால் தெய்வ அவதாரங்கள் அதிகம் நிகழ்ந்த மாதம், பாவநிவிர்த்தி தரும் மாதம், செல்வ வளம் பெருக்கும் மாதம், தெய்வ அருள் எளிதில் கிடைக்கும் மாதம் என்று போற்றப்படுவது தான், வைகாசி மாதம். இந்த மாதத்தை, “மாதவ மாதம்”, “வைகாசம்” என்றும் சாஸ்திரங்கள் போற்றுகின்றன. வைகாசி மாதத்தில் செய்யப்படும் வழிபாடுகள், புனித நீராடல்கள், தான தர்மங்கள், விரதங்கள் ஆகியன மனித வாழ்க்கையில் ஆயுள், செல்வம், புத்திரப்பேறு, குடும்ப அமைதி, மனநிம்மதி அனைத்தையும் அளிக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.வைகாசி முதல் நாளில் கங்கை நீராடினால் ஏழேழு ஜென்ம பாவங்கள் நீங்கும் என சாஸ்திரங்களில் கூறப்படுகிறது. அனைவராலும் கங்கை சென்று நீராட முடியாவிட்டாலும் அருகிலுள்ள புனித நதியில், கோவில் தீர்த்தத்தில், வீட்டில் கங்கை ஜலம் சேர்த்து நீராடினாலும் புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. வைகாசி மாதத்தில் மகாவிஷ்ணுவை துளசி இலைகளால் பூஜை செய்தால் நற்பேறுகள் கிடைக்கும் என விஷ்ணு புராணத்தில் கூறப்படுகிறது. இந்த மாதத்தில் பெருமாள் கோவில் தரிசனம், துளசி அர்ச்சனை, எள் தானம் செய்வது மிகவும் சிறப்பு.
தெய்வ அவதாரங்கள் :
வைகாசி பௌர்ணமி நாளில், சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவை சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக தோன்றின. ஆறு கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட அந்த ஆறு குழந்தைகளையும், பின்னர் பார்வதி தேவி அவற்றை ஒன்றிணைத்தார். இதனால் முருகப் பெருமானுக்கு, கந்தன் என்ற பெயர் ஏற்பட்டது. முருகப் பெருமான் அவதரித்த விசாக நட்சத்திரத்தில் வருவதையே வைகாசி விசாகம் என்று
மிகப்பெரிய முருக விரத நாளாக கொண்டாடுகிறோம்.அசுரர்களை அழித்து, தேவர்களை காப்பதற்காக தோன்றிய முருகப் பெருமான், உலகில் உள்ள தீமைகளில் இருந்து தன்னுடைய பக்தர்களை காப்பார் என்பது நம்பிக்கை. வைகாசி மாத சுக்ல பட்ச சதுர்த்தசி நாளில் மகாவிஷ்ணு, பிரகலாதனை காப்பாற்ற ஒரு நொடி நேரத்தில் நரசிம்ம அவதாரம் எடுத்தார். இந்த அவதாரம், பக்தனை காப்பாற்ற இறைவன் எந்த வடிவமும் எடுப்பார் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தியது.புத்தர் ஞானம் பெற்ற புனித நாள் :
வரலாற்றின் படி, கௌதம புத்தர் அவதரித்ததும், போதி மரத்தடியில் அவர் ஞானம் பெற்றதும் வைகாசி பௌர்ணமி நாளில் தான் என சொல்லப்படுகிறது. அதனால் உலகம் முழுவதும் உள்ள புத்த மதத்தினர் வைகாசி பௌர்ணமியை மிகப்பெரிய புனித நாளாகக் கொண்டாடுகின்றனர். இதை புத்த பூர்ணிமா என்ற பெயரில் மிறப்பாக கொண்டாடுகிறார்கள். மகா பெரியவர், ஆதிசங்கரர் அவதாரம் செய்த மாதமும் வைகாசி மாதம் தான். திருஞானசம்பந்தர் வைகாசி மாத மூல நட்சத்திரத்தில் அவதரித்ததாக சொல்லப்படுகிறது.நாயன்மார்கள் சிலரும் அவதரித்த தெய்வீக மாதம் வைகாசி மாதம்.
சிவபெருமானுக்கு செய்ய வேண்டிய வழிபாடு :
வைகாசி பௌர்ணமி நாளில் சிவபெருமானுக்கு மகிழம்பூ நிற பட்டாடை சாற்றி, 108 பத்மராக கற்களால் ஆன மாலை அணிவித்து, எள் சாதம் நிவேதனம் செய்து வழிபட்டால் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. வைகாசி மாதத்தில், “ரிஷப விரதம்”சிவபெருமானுக்காக கடைப்பிடிக்கப்படும் முக்கிய விரதமாகும். இந்த விரதத்தை அனுஷ்டித்தால் குடும்பத்தில் அமைதி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
புராணங்களின் படி எமதர்மராஜன், வைகாசி விசாக நாளில் அவதரித்தார். அதனால் திருப்பைஞ்ஞீலி, ஸ்ரீவாஞ்சியம் போன்ற தலங்களில் இந்த நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. வைகாசி மாதம், சிவபெருமான் – பார்வதி திருமணம், முருகன் – தெய்வானை திருமணம் நடைபெற்ற புனித மாதம் என்றும் கூறப்படுகிறது. வைகாசி மாதத்தில் ஸ்ரீ ராமர் மற்றும் அனுமனை வழிபட்டால் கஷ்டங்கள் விலகும், மன உறுதி அதிகரிக்கும், வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் வரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இந்த மாதத்தில் எள் தானம் செய்வது மிகவும் புண்ணியமானதாக கருதப்படுகிறது. இது விஷ்ணு பகவானை மகிழ்விக்கும், பாவநிவிர்த்தி தரும், செல்வ வளம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.வைகாசி மாதம் என்பது வெப்பம் குறைந்து, வசந்த காற்று வீசத் தொடங்கும் காலம். இயற்கையில் ஏற்படும் இந்த மாற்றம் போலவே மனித வாழ்க்கையிலும் துன்பங்கள் குறைந்து, சுகமும் நிம்மதியும் வரும் என்று முன்னோர் நம்பினர்.