இதுக்கு நீங்க வராம ஊர்லயே இருந்திருக்கலாம்

இந்தியா மற்றும் இலங்கையில் 2026- டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று ஆட்டத்தில் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று இரவு நடைபெற்றது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 77 ரன்கள் குவித்தார். அவருக்கு உறுதுணையாக சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும், ஷிவம் துபே 27 ரன்களும் எடுத்தனர்.
176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் ’சர்ஜிகல் ஸ்டிரைக்குக்கு’ ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து, இறுதியில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் தோல்வியடைந்தது.
இந்திய அணி தரப்பில் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், திலக் வர்மா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 50 ஓவர் மற்றும் டி20 உலகக்கோப்பைகளில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது.
இப்போட்டி நடைபெறுமா? ரத்தாகுமா? என்ற கேள்விக்குறி எழுந்த நிலையில், கடைசி நேரத்தில் பாகிஸ்தான் அரசு இப்போட்டியில் கலந்து கொள்ள பாகிஸ்தான் அணியை அனுமதித்தது.
இந்த போட்டியில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என ஆரம்பத்தில் பாகிஸ்தான் அணி பூச்சாண்டி காட்டி வந்தது. பின்னர் ஐசிசியின் மிரட்டலுக்கு பணிந்து இந்தியாவுடன் விளையாட சம்மதித்தது.
இப்படி படுமோசமாக தோற்றத்துக்கு நீங்க ஊர்லயே இருந்திருக்கலாம் என இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் அணியை கிண்டலடித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *